செவ்வாய் தோஷம் 2
செவ்வாய் தோஷம் பற்றிய சூட்சுமங்களை இந்த வாரமும் தொடர்ந்து பார்க்கலாம்.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகளில் சில முரண்பாடுகள் உள்ளன என்று சென்ற வாரம் குறிப்பிட்டேன். அவற்றில் முக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம்.
முதலில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றால் தோஷம் இல்லை என்ற விஷயத்தில் நான் மாறுபடுகிறேன். என்னுடைய அனுபவத்தில் இந்த விதிவிலக்கு எல்லா நிலைகளிலும் பொருந்தாது.
நமது மூலநூல்களில் உள்ள ஏராளமான இடைச் சொருகல்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அல்லது அந்தக் காலத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு செவ்வாயின் வலிமை தேவைப்பட்டதால் அக்காலத்திற்கு இது சரியானதாக இருந்திருந்திருக்கலாம்.
இன்றைய சூழலுக்கு ஏற்ப இந்த விதி ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் குருவுடனோ சந்திரனுடனோ இணைந்து அல்லது அவர்களின் பார்வையில் இருந்தாலோ அல்லது வேறு வகைகளில் சுபத்துவமோ அல்லது சூட்சும வலுவோ அடைந்திருந்தால் மட்டுமே தோஷம் இல்லை என்று துல்லியமாக சொல்லப்பட வேண்டும்.
செவ்வாய் என்பவர் ஒரு பாபக் கிரகம். இவர் நமது மூலநூல்களில் முக்கால் பாபராக குறிப்பிடப்படுகிறார். இந்த முக்கால் பாபர் என்பதில் ஒருவருக்கு செவ்வாய் முக்கால் பாகம் பாபியாகவும் கால்பங்கு சுபராகவும் செயல்படுவார் என்ற சூட்சுமம் மறைந்திருக்கிறது.
நமது ஞானிகள் சகல விஷயங்களையும் முழுமையாக ஆராய்ந்து இந்த தெய்வீகக் கலையை சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து விஷயங்களையும் ஒரு துல்லிய நிலையிலேயே நமக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பாபக்கிரக அமைப்பும் இதில் அடங்கும்.
அதாவது பாபக் கிரகங்கள் என்று குறிப்பிடப்பட்ட சனி செவ்வாய் சூரியன் ராகு கேது தேய்பிறைச் சந்திரன் இவைகளில் சனி மட்டுமே முழுமையான பாபகிரகம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர் பாபர்தான். நல்ல பலன்களைத் தர மாட்டார்.
சூரியன் அரைப்பாபர். அதாவது பாதி பாபராகவும் மீதி சுபத் தன்மையுடனும் ஜாதகருக்கு நன்மைகளைத் தருவார். ராகு கேதுக்கள் முழுப்பாபர்கள் என்றாலும் தான் இருக்கும் வீட்டின் அதிபதியைப் போலவும் தன்னோடு இணையும் மற்றும் பார்க்கும் கிரகங்களைப் போல செயல்படுவார்கள் என்பதால் ராகுவோடு சுபர்கள் சம்பந்தப்படும் நிலையிலோ சுபர் வீட்டில் ராகு கேதுக்கள் இருக்கும் போதோ சுபராகவே மாறி நன்மைகளைச் செய்வார்கள்.
பவுர்ணமிக்குப் பிறகு உருப்பெறும் தேய்பிறைச்சந்திரன் படிப்படியாக நாளுக்குநாள் தனது சுபத்தன்மையை இழந்து பாபத் தன்மையை அதிகரித்துக் கொண்டே போய் அமாவாசையன்று முழுப் பாபராவார்.
இதில் சனி ஒருவர் மட்டுமே எல்லா நிலைகளிலும் முழுப்பாபர் என்று ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ஆதிபத்திய சுபராகவும் லக்னாதிபதியாகவும் வரும் நிலையில் கூட சனி ஸ்தானபலம் மட்டும் பெற்று சுபத்துவமோ சூட்சும வலுவோ பெறாமால் ஆட்சி உச்சம் அடைந்தாலும் கெடுபலன்களையே செய்வார். இதை எனது பாபக் கிரகங்களின் சூட்சுமவலுத் தியரியில் தெளிவாக விளக்கியிருக்கிறேன்
உதாரணமாக ஒரு கடக லக்ன ஜாதகருக்கு சனி ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று அவர் பாபத்துவம் மட்டுமே பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை உண்டாகும். ஏழுக்குடையவர் ஆட்சியாக இருக்கிறார் சீக்கிர திருமணம் நல்ல மனைவி என்பதெல்லாம் சனியிடம் எடுபடாது. சிம்மத்திற்கும் இதே நிலைதான்.
செவ்வாயும் அதுபோலத்தான். லக்னாதிபதியாகவோ ஆதிபத்தியச் சுபராகவோ இருந்தாலும் செவ்வாய் இரண்டு ஏழு எட்டு ஆகிய இடங்களில் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் கெடுபலன்கள்தான். இது செவ்வாய் தோஷம்தான்.
என்ன ஒன்று சனி முழுமையாக கெடுப்பார். செவ்வாய் முக்கால் பங்கு கெடுப்பார். அவ்வளவே....! செவ்வாய் சுபத்தன்மையோ சூட்சுமவலுவோ பெற்றிருந்தால் மட்டுமே இந்த பலன் மாறும்.
இங்கே சுபத்தன்மை அல்லது சூட்சுமவலு என்பது ஒரு கிரகம் அமர்ந்திருக்கும் டிகிரி, அந்த கிரகம் பெற்ற சாரம் மற்றும் பார்வை, அதனுடன் இணைந்திருக்கும் கிரகம், அந்தக் கிரகத்தின் நவாம்சநிலை, ஷட்வர்க்கங்களில் அந்த கிரகம் பெற்ற பலம், பாபத்தன்மை அதிகம் பெற்ற நிலையில் ராகு கேதுக்களுடன் நெருக்கமாக இணைந்து கெடுதல் செய்யும் வலிமையை இழந்திருக்கிறதா என்பது உள்ளிட்ட இன்னும் சில நுணுக்கமான விஷயங்களைக் குறிக்கிறது.
ஒரு ஜாதகத்தில் இப்படிப்பட்ட செவ்வாய் தோஷம் இருக்கும்போது அதாவது ஆட்சி உச்சம் பெற்ற செவ்வாய் லக்னத்திற்கோ ராசிக்கோ இரண்டு ஏழு எட்டு போன்ற பாவங்களில் இருக்கும்போது முழுப்பாபரான சனியும் இதேபோல ராசிக்கோ லக்னத்திற்கோ இரண்டு ஏழு எட்டு என அமர்ந்தால் அந்த பாவங்கள் ஒட்டுமொத்தமாக வலுவிழந்து தாமத திருமணம் அல்லது திருமணமே ஆகாத அமைப்பு என்ற கடுமையான நிலை உண்டாகிறது.
செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் நிவர்த்தி என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது போன்ற ஒரு அபத்தம் இருக்கவே முடியாது. யாரோ ஒரு அனுபவமற்ற ஜோதிடரின் கருத்தை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதால் வரும் விளைவு இது.
சனி செவ்வாய் இருவரும் சுபத்துவமோ சூட்சுமவலுவோ பெறாமல் லக்னத்திற்கோ ராசிக்கோ இரண்டு ஏழு எட்டு ஆகிய இடங்களில் இணைந்தோ தனித்தனியாகவோ சம்பந்தப்பட்டிருந்தார்களாயின் அந்த ஜாதகருக்கு தாமத திருமணம் அல்லது மணமாகாத நிலை, ஆகியிருந்தால் மணவாழ்வில் சிக்கல், இரண்டு திருமண அமைப்பு என்று கண்ணை மூடிக்கொண்டு பலன் சொல்லி விடலாம்.
மேலும் இதுபோன்ற அமைப்புடையவர்களுக்கு பெண்ணாக இருந்தால் முப்பது வயதிற்கு அருகிலும் ஆணாக இருந்தால் முப்பத்தி ஐந்து வயதிற்கு அருகிலும் திருமணம் நடக்கும்.
எப்போது திருமணம் நடக்கும் என்பது தாம்பத்யசுகத்தை கொடுக்கக் கூடிய கிரகம் அல்லது குழந்தை பாக்கியத்தை தரும் கிரகத்தின் தசை புக்திகளை நுணுக்கமாகக் கணித்துச் சொல்லப்பட வேண்டும். கொஞ்சம் மெனக்கெட்டால் துல்லியமாகச் சொல்லிவிடலாம்.
பொதுவாக இது போன்ற ஏழு, எட்டில் இருக்கும் செவ்வாய் வலுப்பெற்று பாபத்துவம் மட்டுமே பெற்றிருக்கும் நிலையில் திருமண வாழ்க்கையில் மிகவும் சோதனைகளைச் செய்கிறார். இதுபோன்ற அமைப்பில் கணவனுக்கும் மனைவிக்கும் சரியான புரிந்துணர்வைக் கொடுக்காமல் ஈகோ பிரச்னையால் விவாகரத்துவரை சென்று பிரிந்து போனவர்கள் உண்டு.
அதே போல எட்டில் செவ்வாய் இருந்தால் அந்தப்பெண் விதவையாவாள் என்பதிலும் உண்மை இல்லை. ஒரு பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை வர வேண்டும் என்றால் அதற்கு ஜாதகத்தில் செவ்வாய் தவிர்த்து வேறு சில அமைப்புகளும் கணவனின் ஜாதகத்தில் அவரது ஆயுள் ஸ்தானமும் பார்க்கப்பட வேண்டும். மிக அரிதாகவே இதுபோன்ற அமைப்பில் கணவனின் ஆயுளை செவ்வாய் பாதிக்கிறார். எனது அனுபவத்தில் பெரும்பாலும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவினை மட்டுமே வருகிறது..
அதே நேரத்தில் செவ்வாய் தோஷத்தால் ஒருமுறை வாழ்க்கை கோணலாகிப் போனவர்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தால் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொண்டு இரண்டாவதாக அமையும் வாழ்வில் மிகவும் சிறப்பாகவே தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
அதோடு இந்த அமைப்பில் இருக்கும் செவ்வாய் சிறிய வயதில் திருமணமானால் மட்டுமே கணவனைப் பிரியும் நிலையை ஏற்படுத்துவார். முப்பது வயதிற்கு மேல் திருமணமாகும் பெண்களுக்கும் முப்பத்திமூன்று வயதிற்கு மேல் திருமணமாகும் ஆண்களுக்கும் செவ்வாய் தோஷத்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. தாமதமாக திருமணமானாலும் நல்ல வாழ்க்கையே அமையும்.
எனது அனுபவத்தில் கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து அந்த செவ்வாய் சுபத்துவம் பெற்று மற்றவருக்கு தோஷம் இல்லாமல் இருக்கும் நிலையில் இருவரும் பல ஆண்டுகள் நலமாக வாழ்வாங்கு வாழ்வதைப் பார்த்திருக்கிறேன்.
எனவே செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்றவுடன் யாரும் அலறித் துடிக்கவேண்டியது இல்லை. முறையான வழிபாடுகள், பிரார்த்தனைகள் மூலம் திருமண பந்தத்தை கோணலாகிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.
செவ்வாய் தோஷம் பற்றிய இன்னும் சில நுணுக்கங்களை அடுத்த வியாழன் பார்க்கலாம் .
செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?
செவ்வாய் தோஷத்திலும் சில அளவீடுகள் உள்ளன. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் செவ்வாய் இருப்பது முழு தோஷமாகும். இரண்டாம் வீட்டில் இருப்பது அதற்கடுத்த கடுமையான அமைப்பாகவும், பனிரெண்டாமிடம் அடுத்தும் இறுதியாக நான்காமிடம் குறைவான தோஷம் உள்ளதாகவும் கணக்கிடப்படுகின்றன.
இந்நிலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏழு அல்லது எட்டில் செவ்வாய் இருக்கும்போது அவை சமதோஷமுள்ள ஜாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டையும் இணைக்கலாம்.
அடுத்து ஒருவரின் லக்னத்திற்கு ஏழு, எட்டில் உள்ள செவ்வாயை அடுத்தவரின் ராசிக்கு ஏழு, எட்டில் இருக்கும் செவ்வாயுடன் இணைத்துப் பொருத்தலாம். இதுவும் சமதோஷமாகக் கருதப்பட்டு இருவரும் நல்வாழ்க்கை வாழ துணை புரியும்.
அதேபோல ஒருவரின் ஜாதகத்தில் இரண்டிலுள்ள செவ்வாயை ஏழு, எட்டில் உள்ள மற்றவரின் ஜாதகத்துடன் பொருத்துவது சிலநிலைகளில் சரிதான் என்றாலும் நான்கு, பனிரெண்டாமிடங்களில் செவ்வாய் இருக்கும் குறைந்த அளவு தோஷமுள்ள ஜாதகத்தை கடுமையான ஏழு, எட்டாமிட செவ்வாயுடன் இணைப்பது தவறு.
இன்னும் ஒரு நுணுக்கமாக ஒருவருக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் அடுத்தவருக்கு இரண்டாமிடத்தில் சனி என்பது மிக நல்ல பொருத்தம்தான். இருவருக்குமே குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் பாபகிரகம் இருப்பதால் சமதோஷமாகி கெடுதல் வர வாய்ப்பில்லை. ஆனால் இருவரில் ஒருவருக்கு ஒரு கிரகம் சுபத்துவம் அடைந்திருந்தால் பொருத்தக் கூடாது.
கிரக பாப சுப வலுக்கள் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இந்த விதி ஏழு எட்டாமிடங்களுக்கும் சரிவரும். ஒருவருக்கு ஏழில் சனி இன்னொருவருக்கு ஏழில் செவ்வாய் என்பது தீமைதராத பொருத்தமே. அதுபோலவே ஒருவரின் எட்டில் செவ்வாய் இன்னொருவருக்கு எட்டிலோ இரண்டிலோ சனி என்பதும் இணைக்க வேண்டிய ஜாதகம்தான்.
மொத்தத்தில் செவ்வாய் தோஷத்தை கணக்கிடும்போது சனியும் அந்த ஜாதகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டீர்களானால் குழப்பம் எதுவுமில்லாமல் பொருத்தம் பார்க்கவோ பலன் சொல்லவோ துல்லியமாகக் கை கொடுக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக