நஷ்ட்டஜாதகம்

நஷ்ட ஜாதகம் அறியும்  முறை    ஆய்வு பகுதி                                                                                                                                                                                                                பிருஹஜ் ஜாதகத்தின் 26-வது அத்தியாயம் நஷ்ட ஜாதகம் கணிக்கும் முறையை விரிவாகச் சொல்கின்றது. ஒரு மனிதன் பிறந்த நேரம் தெரியாத போது அவனுக்கு ஜாதகம் கணிக்கும் முறையே ‘நஷ்ட ஜாதகம் கணித்தல்’ என்றழைக்கப்படுகிறது. ‘எனக்கு ஜாதகம் எழுதப்படவில்லை. ஆனாலும் எனக்கும் என் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசை’ என்று கூறிக்கொண்டு யாரேனும் சோதிடரை அணுகினால் அவருக்குப் பிரஸ்ன லக்னத்தின் உதவியால் உண்மையான ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என்று விளக்குவதே இந்தக் கட்டுரையின் சாரம்.

பிரஸ்ன லக்னம் என்பது சோதிடரை ஜாதகமில்லாத ஒருவர் வந்து அணுகும் நேரம் என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தின் லக்ன, கிரகஸ்புடங்களைக் கணித்தபின் லக்னம் ஒரு ராசியின் முதல் 15 பாகைகளுக்குள் இருந்தால் கேள்வி கேட்டவர் உத்தராயனத்தில் பிறந்தவர் என்றும், இரண்டாவது 15 பாகைகளுக்குள் லக்னம் இருக்குமானால் தட்சிணாயனத்தில் பிறந்தவர் என்றும் முடிவுக்கு வர வேண்டும். இதன் மூலம் ஒரு வருடத்தின் எந்த ஆறு மாதங்களுக்குள் அவர் பிறந்தார் என்று அறிந்து கொள்ளலாம். தை மாதம் முதல் ஆனி முடிய உள்ள ஆறு மாதங்கள் உத்தராயன காலம் என்றும், ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்கள் தட்சிணாயன காலம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

உத்தராயணம் அல்லது தட்சிணாயனம் என்ற முடிவுக்கு வந்த பின்னர் அந்த ஆறு மாதங்களில் எந்த ருதுவில் பிறந்தார் என்பதைத் திரேக்காணம் மூலம் அறியலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. லக்னம், சூர்யன் அல்லது செவ்வாயின்  திரேக்காணத்தில் இருந்தால் கிரீஷ்ம ருதுவில் பிறந்தவர் என்றும், சந்திரனின் திரேக்காணம் லக்னத்துடன் சம்பந்தப்பட்டிருந்தால் வர்ஷருதுவில் பிறந்தவர் என்றும் அறிந்துகொள்ள வேண்டும். புதனின் சம்பந்தமிருந்தால் சரத்ருதுவில் பிறந்தவர் என்றும், குருவின் சம்பந்தமிருந்தால் ஹேமந்த ருதுவில் பிறந்தவர் என்றும், சுக்கிரனின் சம்பந்தம் இருந்தால் வசந்த ருதுவில் பிறந்தவர் என்றும், சனியின் சம்பந்தம் இருந்தால் சிசிர ருதுவில் பிறந்தவர் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். அயனமும், ருதுவும் மாறி வருமானால் சந்திரனுக்குப் பதிலாகச் சுக்கிரனையும், புதனுக்குப் பதிலாக செவ்வாயையும், குருவுக்குப் பதிலாகச் சனியையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
   
அதாவது உத்தராயனத்தில் சிசிர ருது, வசந்த ருது, கிரீஷ்ம ருது என்ற மூன்று ருதுக்களும், தட்சிணாயனத்தில் வர்ஷ ருது, சரத்ரு து, ஹேமந்த ருது என்ற மூன்று ருதுக்களும் அடங்கியுள்ளன. லக்னத்தின் முதல் 15 பாகைகளுக்குள் பிறந்தவர் என்றால் உத்தராயனத்தில் பிறந்திருப்பார் என்று சொன்னோம். திரேக்காணத்தின்படி தட்சிணாயனத்தில் உள்ள வர்ஷ ருதுவில் பிறந்ததாக வந்தால் அவை ஒன்றுக்கொன்று முரண்படும். அப்படி ஏற்படும் பட்சத்தில் சந்திரனின் வர்ஷரு துவிற்குப் பதிலாக சுக்கிரனின் வசந்த ருதுவில் பிறந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அயனமும், ருதுக்களும்

ஜூன் 21 முதல் டிசம்பர் 20 முடிய தட்சிணாயனம்
டிசம்பர் 21 முதல் ஜூன் 20 முடிய உத்தராயனம்
ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 20 முடிய வர்ஷ ருது
ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 20 முடிய சரத் ருது
அக்டோபர் 21 முதல் டிசம்பர் 20 முடிய ஹேமந்த ருது
டிசம்பர் 21 முதல் பிப்ரவரி 20 முடிய சிசிர ருது
பிப்ரவரி 21 முதல் ஏப்ரல் 20 முடிய வசந்த ருது
ஏப்ரல் 21 முதல் ஜூன் 20 முடிய கிரீஷ்ம ருது

இந்தத் தேதிகள் ஒரு நாள் முன்பின்னாக வரலாம். அயனம், ருது இவையிரண்டும் சாயன சூர்யஸ்புடம் மூலம் அறியப்பட வேண்டும்.

இப்போது ஜாதகம் இல்லாத ஒருவர் பிரஸ்னம் கேட்ட போது உதயமான லக்னத்தைக் கொண்டு அவர் எந்த இரண்டு மாதங்களுக்குள் பிறந்தார் என்று அறிந்து கொண்டோம். 10 பாகைகள் கொண்டது ஒரு திரேக்காணம். எனவே ஒரு திரேக்காணத்தின் முதல் 5 பாகைகளுக்குள் லக்னம் உதயமானால் ஒரு ருதுவின் முதல் மாதத்திலும், இரண்டாவது 5 பாகைகளுக்குள் லக்னம் உதயமானால் அந்த ருதுவின் இரண்டாவது மாதத்திலும் பிறந்ததாக அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கேள்வி கேட்டவரின் மாதம் அறியப்பட்டுவிட்டது.

திரேக்காணத்தின் முதல் 5 பாகை என்பது 300 கலைகளாகும். ஒரு மாதத்ததுக்கு 30 நாட்களாதலால் 10 பாகைகள் 1 நாளாகக் கணக்கிடப்பட்டு பிறந்த தேதியையும் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக பிரஸ்ன லக்னம் சிம்மத்தில் 26 பாகையில் உதயமாகிறது என்றால் ராசியின் இரண்டாவது பகுதியில் லக்னம் உள்ளது. எனவே ஜாதகன் பிறந்தது தட்சிணாயனம். திரேக்காணம் மேஷம். அதில் குரு இருப்பதாக வைத்துக்கொண்டால் குருவின் ஹேமந்த ருதுவில் ஜனனம். அதாவது அக்டோபர் 21 முதல் டிசம்பர் 20 முடிய உள்ள காலத்தில் பிறப்பு. 26 பாகை என்பது திரேக்காணத்தின் இரண்டாவது பாகம். (21-25 முதல் பாகம் 26-30 இரண்டாவது பாகம்) . எனவே ஹேமந்த ருதுவின் இரண்டாவது மாதமான மார்கழியில் பிறப்பு. 26 பாகை என்பது இரண்டாவது பாகத் திரேக்காணத்தில் 5ல் ஒரு பங்கு. 300 கலையில் 60 கலை என்பது 1/5 பங்கு. அதாவது மாதத்தை 5 பங்கு வைத்தால் முதல் பங்கான 6-வது நாளில் பிறந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாமே மிகச் சாதாரணமான கணக்குகளே. பார்க்கின்ற ஜாதகங்களுக்கு எல்லாம் லக்னஸ்புடமும், கிரகஸ்புடங்களும் கணித்துச் சொல்கின்ற சோதிடர்களுக்கு மட்டுமே இவை எளிதான கணக்குகள். மற்றவர்களுக்கு இவைகளைப் புரிந்துகொள்வதே கஷ்டம்.

இப்பொழுது மாதம், தேதி அறியப்பட்டு விட்டது. இனி லக்னம் மட்டுமே அறியப்பட வேண்டியது. பிரஸ்ன லக்னம் பகலில் பலமுள்ள ராசியானால் ஜாதகன் இரவில் பிறந்தார் என்றும், இரவு பலமுள்ள ராசியானால் ஜாதகர் பகலில் பிறந்தார் என்றும் மாற்றி நிச்சயம் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஜாதகர் பிறந்தது இரவா, பகலா என்பது நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. இனி லக்னம் மட்டுமே நிச்சயம் செய்யப்பட வேண்டும்.

பிரஸ்ன லக்னத்தின் முதல் த்வாதசாம்சம் உதயமானால் ஜன்மலக்னத்திலேயே வியாழன் இருக்கும் எனவும், இரண்டாவது த்வாதசாம்சம் உதயமானால் ஜன்மலக்னத்துக்கு இரண்டில் இருக்கும் எனவும் இப்படியே 12 த்வாதசாம்சங்களுக்கும் அறிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவர் வருஷத்தை சொல்லித்தான் ஜாதகம் கணிக்கச் சொல்வார். அந்த வருஷத்தில் குரு எந்த ராசியில் இருந்தது என்பதைப் பார்த்து அதன் மூலம் மேற்கண்ட முறையில் லக்னத்தை அறிந்துகொள்ளலாம்.

எனவே பிறந்த வருடம் மட்டுமே தெரிந்து வேறொன்றும் தெரியாத ஒருவர் வந்து ஜாதகம் எழுதச் சொன்னால் மேற்கண்ட முறைப்படி அவரது பிறந்த மாதம், தேதி, லக்னம் இவை நிச்சயிக்கப்பட வேண்டும். நஷ்ட ஜாதக அத்தியாயத்தின் ஒரு பகுதியே இங்கு விளக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி அவ்வளவு எளிதானது அல்ல என்பதால் இங்கே விளக்கப்படவில்லை. சோதிடத்தில் ஆராய்ச்சி செய்கின்றவர்கள் மேலேயுள்ள முறைகளைப் பரிட்சை செய்து பார்த்துக் கொண்டால் சோதிடத்தில் வல்லுனர் ஆவது நிச்சயம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்திரனின் நீச நிலை

பீஜம் ஷேத்திரம் 2

திருமணப் பொருத்தம் 4