அக்னி நட்சத்திரம்
அக்னி நக்ஷத்திரம் எனும் கத்திரி வெயில்...
அக்னி நக்ஷத்திர சிறப்பு பதிவு:
அக்னி நக்ஷத்திரம் பற்றிய புராண கதை
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. "அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.
இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.
அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.
ஜோதிட ரீதியாக அக்னி நக்ஷத்திரம் பற்றிய பார்வை:
சூரிய வெப்பம் மிக அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம்
என்கிறோம்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்றும் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்கள்.
‘அக்னிர்ந: பாது க்ருத்திகா’ என்கிறது வேதம். அதாவது, கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய. தேவதை ‘அக்னி’. அதனால் இந்த
நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் என்று
பெயர் பெற்றது. கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு
பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள்
சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு
பாதம்வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை
சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம்
என்று அழைப்பார்கள்.
அக்னி நக்ஷத்திர நாளில் சந்திரன் மட்டுமல்ல; பூமிகூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும் சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.
ஆக 27 நட்சத்திரங்களில் அக்னி நக்ஷத்திரம் எனும் பெயர் எந்த நக்ஷத்திரத்திற்க்கும் கிடையாது. ஆனால் அக்னியை அதிதேவதையாக கொண்ட கிருத்திகை நக்ஷத்திரத்தில் அக்னி ராசியான மேஷத்தில் நெருப்பு கிரகமான சூரியன் உச்சம் பெற்று மேலும் வெப்பமடையும் காலத்தையே அக்னி நக்ஷத்திரம் எனப்படுகிறது.
கத்திரி என பெயர் எப்படி வந்தது?
கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது என நட்சத்திர சிந்தாமனி எனும் ஜோதிட நூல் கூறுகின்றது.
கத்தியை குறிக்கும் அக்னியின் கிருத்திகா நக்ஷத்திரத்தில் சூரியன் பிரவேசம் செய்யும் காலத்தை கத்ரி என குறிப்பிட்டிருக்கலாம்.
சூரியனை கதிரவன், கதிர் என குறிப்பிடப்படுகிறது. ஜோதிடத்தில் ஜாமக்கோள் ஆருட முறையில் சூரியனை கதிர் என்றே கூறப்படுகிறது. கதிரோன் அல்லது கதிர் கத்தியை குறிக்கும் நக்ஷத்திரத்தில் உச்சமாகும் காலம் கதிரி என்பது மருவி கத்ரி என வழக்கில் வந்திருக்கலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.
ஆனால் புரான ஆதாரங்கள் எதுவுமில்லை. என்றாலும் ஊக கருத்துக்களும் பொருந்துவதாகவே தோன்றுகிறது.
எது எப்படி இருந்தாலும் விவாஹம் போன்ற சுப காரியங்களை தவிர்க்க வேண்டிய காலம் என காலப்பிரகாசிகை எனும் நூல் கூறுகிறது. சித்திரை மற்றும் அக்னி நக்ஷத்திர காலத்தில் ஆத்ம காரகனான சூரியன் உச்சம் பெற்று கால புருஷ களத்திர பாவமான துலா ராசியை பார்க்கும் காலத்தில் விவாஹம் செய்வது தம்பதிகளின் அன்னியோன்யத்தை கெடுக்கும் என கூறுகிறது காலபிரகாசிகை.
அக்னி நக்ஷத்திர காலத்தில் என்ன செய்யலாம்?
1. அக்னியின் மனைவி ஸ்வாஹா தேவியாவாள். ஹோமங்களில் நாமிடும் அவிர்பாகங்கள் ஸ்வாஹா தேவி அக்னியிடம் அளித்து அக்னி பகவான் சம்மந்தப்பட்ட தெய்வங்களிடன் சேர்த்துவிடுவார். அதனால் தான் ஹோமங்களில் நெய் விடும்போதும் மற்ற பொருட்களை அளிக்கும்போதும் "ஸ்வாஹா" என மந்திரத்தின் முடிவில் வருமாறு கூறி ஹோமத்தில் சேர்க்கிறோம். எனவே இந்த அக்னி நக்ஷத்திர காலத்தில் ஹோமங்கள் பலவும் செய்வது நன்மையளிக்கும். அதிலும் பித்ரு காரகன் உச்சமான போது பித்ரு ஹோமங்கள் தில ஹோமங்கள் போன்றவை செய்வது மிகுந்த பலனளிக்கும்.
2. அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது.
3. உடம்பின் சூடு தனியவும் அம்மை, வைசூரி, வேணல் கட்டிகள் ஆகியவை தாக்காமல் இருக்க ஸ்ரீஸீதலாஷ்டகம் எனும் ஸ்லோஹத்தை பாராயணம் செய்வது
கருத்துகள்
கருத்துரையிடுக